வயதானவர்கள் முதியவர்கள் சீனியர் சிட்டிசன் மூத்த குடிமக்கள் தங்களது 60 வயதை எட்டியவுடன் ஓய்வூதிய பலன்களை பெரும்பாலையில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல ஓய்வூதிய திட்டங்களும் நடைமுறையில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை ஒவ்வொரு திட்டத்தின் மூலமாக பயன்பெறுவதற்கு பங்களிப்பு தொகை பற்றியும் விண்ணப்பம் செய்வதற்கான ஆவணங்கள் எவ்வாறு இந்த திட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்க முடியும் அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்சமாக எவ்வளவு தொகை ஓய்வூதியமாக பெற முடியும் என்பது பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஏழைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்க்கத்தினர், அமைப்பு சாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு ஓய்வுக் காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் விதமாக இந்திய அரசாங்கத்தால் 9 மே 2015 அன்று தொடங்கப்பட்ட உன்னதமான திட்டமே அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.
இந்த திட்டத்தின் மூலமாக ஒருவர் மாதந்தோறும் 1000, ரூபாய் 2000 ரூபாய், 3000 ரூபாய், 4000 ரூபாய் அல்லது 5000 ரூபாய் வரை ஓய்வூதியமாக பெறலாம்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டம் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கும் திட்டம் என்பதால் முதலீடு சார்ந்த அபாயம் எதுவும் இருக்காது மற்றும் முதலீடு தொகைக்கு ஆண்டுதோறும் 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
சுயதொழில் செய்பவர்கள், கூலித்தொழிலாளர்கள், தனியார் துறையில் பணியாற்றுபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வுதிய சலுகைகளை வழங்காத நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பெஸ்ட் ஓய்வூதிய திட்டம் என்றே சொல்லலாம்.
திட்டத்தில் சேரும் நாளில் இருந்து 60 வயது ஆகும் வரை அவர்கள் செலுத்தும் சந்தாவின் அடிப்படையில் 60 வயது முதல் அவர்களின் இறப்பு காலம் வரை மாதந்தோறும் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு சந்தாதாரர் குறைந்த பட்சமாக 20 ஆண்டுகளும், அதிகபட்சமாக 42 ஆண்டுகளும் முதலீடு செய்ய வேண்டியது இருக்கும். பின்னர், அவர்கள் 60 வயதை எட்டியவுடன் மாதந்தோறும் உத்தரவாதமான ஓய்வூதியத்தை பெறத் தொடங்குவார்கள்.
ஏற்கனவே அமைப்புசாரா துறையினருக்கான ஓய்வூதியத் திட்டம் சேர்ந்துள்ள சந்தாதாரர்களும் இந்த திட்டத்தின் மூலம் கணக்கை தொடங்கலாம். அதாவது இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த உடன் தானாகவே அடல் ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்பட்டு விடுவார்கள்.
எதிர்பாராத விதமாக இந்த திட்டத்தின் சந்தாதாரர் இறந்துவிட்டால், சந்தாதாரரின் கணவன் அல்லது மணைவிக்கு அவர்களின் இறப்பு காலம் வரை அதே ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.
ஒருவேளை இரண்டு பேருமே இறந்துவிட்டால் அந்த பென்ஷன் தொகையானது சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் சூப்பரான அம்சம் என்னவென்றால், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் சந்தாவை செலுத்திக் கொள்ளலாம். இது மாதந்தோறும் சந்தா செலுத்த முடியாதவர்களுக்கு சிறந்த வழி.
மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைகளுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சிசிடி (1பி) இன் கீழ் 50,000 ரூபாய் வரை விலக்கு உண்டு.
அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்ய 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவராகவும், இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். தனியார் துறையில் உள்ள ஊழியர்களும், ஓய்வூதிய சலுகைகளை வழங்காத நிறுவங்களில் பணிபுரிபவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டியது அவசியம். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு பணியில் இருக்கக் கூடாது. வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக் கூடாது. அதேபோல், மத்திய அரசின் மற்ற எந்தவொரு பென்ஷன் திட்டங்களுக்கும் விண்ணப்பித்து இருக்கக் கூடாது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், SSLC சான்றிதழ், சேமிப்புக் கணக்கு எண் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உங்களுடைய கணவன் அல்லது மனைவி மற்றும் நாமினியின் ஆதார் எண்ணையும் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் சேரும் போது மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும் வகையில் அக்கவுண்ட் துவங்கிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இடையில், மாதாந்திர ஓய்வூதியத் தொகை 2000 ரூபாய் அல்லது 3000 ரூபாய் அல்லது 4000 ரூபாய் அல்லது 5000 ரூபாய் ஆக அதிகபடித்துக் கொள்ள முடியும்.
ஆனால் அதை வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல் மாதத்தின் போது மட்டுமே செய்ய முடியும். அதை நீங்கள் கணக்கு தொடங்கிய வங்கியில் 25 ரூபாய் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். அதேபோல் மாதாந்திர ஓய்வூதிய தொகையை ரூ.5000 லிருந்து குறைத்தும் கொள்ளலாம். நீங்கள் மாதந்தோறும் சந்தா செலுத்தும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இருக்கும் பட்சத்தில், அதை 6 மாதங்களுக்கு கட்டாமல் விட்டுவிட்டால், உங்களுடைய APY அக்கவுண்ட் முடக்கப்படும். அதுவே, 12 மாதங்களுக்கு கட்டத் தவறினால், அக்கவுண்ட் செயலிழக்கப்படும். அதேபோல், 24 மாதங்களுக்கு செலுத்தவில்லை என்றால், அக்கவுண்ட் தானாகவே மூடப்படும். எனவே, தாமதமாக பணம் செலுத்துவதை தவிர்த்து விடுங்கள்.